தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (2026.01.22) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அதிபர் கருத்து தெரிவிக்கையில், இன்றைய நிகழ்வு மதங்களுக்கு இடையிலான நல்லுறவை பேணுகின்ற ஒரு விடயமாக காணப்படுவதாகவும், மனிதனின் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையிலும் மதம் அடிப்படையாகவுள்ளது எனவும், பிறப்பிலிருந்து அம் மதத்தை கடைப்பிடித்து ஒழுகி வருவதாகவும், நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்ல மதம் ஒரு ஊடகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சமூகத்தை ஒன்றிணைக்கின்ற செயற்பாட்டை மதங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு பிள்ளையினுடைய சமூகமயமாக்கல் செயற்பாட்டில் மதங்கள் பாரிய செல்வாக்கு செலுத்தி வருவதாகவும், ஒரு குழந்தை ஆரம்ப கல்வி, பாடசாலை கல்வி கற்பதன் ஊடாக மதம் சார்ந்ததாக மாற்றப்படுவதாகவும் மத நம்பிக்கை மற்றும் பின்பற்றப்படும் அனுட்டானங்கள், முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் பழகுகின்ற போது பிள்ளை இயல்பாகவே மதங்களின் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் மதங்கள் இரண்டு விதமான விடயங்களை கூறுவதாகவும், ஒன்று மதங்கள் நல்லிணக்கத்தையும் நல்ல செயற்பாடுகளையும் சமூகத்துக்கு மேற்கொள்கின்றது எனவும், மற்றையது மதங்களுக்கு இடையே நல்லிணக்க செயற்பாட்டை வலுப்பெற செய்வதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை நல்லிணக்கச் செயற்பாடுகள் வலுப்பெற்று வருவதாகவும், முன்னைய காலத்தில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டதாகவும் அவை தற்போது மாறி வலுப்பெற்று வருவதாகவும் , முரண்பாடுகள் ஏற்பட்டாலும் அதனை தவிர்ப்பதற்கான இயலுமை மத தலைவர்களிடம் காணப்படுவதாகவும், பொது நிகழ்வுகளில் மதத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி வருவது சமூக நல்லிணக்கத்திற்கான தொடக்க செயற்பாடாகவும் தெரிவித்தார்.
மேலும், இறைவன் பொதுவான ஒருவராக காணப்பட்டாலும் அவரை பல்வேறு மதங்களும் ஒவ்வொரு மத பிரமாணத்துடன் வழிபட்டு வருவதாகவும் , விழுமியங்கள் , பண்பாடுகள், கலாசாரங்கள் ஆகிய நெறிமுறைகளை சரியாக பேணுவோமேயனால் மத நல்லிணக்கம் பேசு பொருளாய் இருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படாது எனவும், சமூகப் போக்கில் மத நிகழ்வுகளோடு மட்டும் நின்றுவிடாமல் சமூக நல்லிணக்கம், சமூக விழிப்புணர்வு சமூக செயற்பாடுகளில் உயர்ந்தளவு மத விழுமியங்கள் தேவைப்படுதாகவும், ஒரு மனிதனை மனிதனாக மாற்றுவதற்கு இம் மதங்கள் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் மத நல்லிணக்க செயற்பாடுகள் நல்ல நிலையில் காணப்படுவதாகவும், அதனை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுக்க அனைவரது ஒத்துழைப்பினையும் வழங்குமாறுகேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட சர்வமத தலைவர்கள் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்தூர்ராஜா, தேசிய சமாதானப் பேரவையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு உத்தியோகத்தர் த.நிலக்சி, PAIRS நிறுவன யாழ்ப்பாண,வவுனியா மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்ட செயலக துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.