இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் வைப்பிட வேண்டாம் ; முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட வேண்டாம்
அண்மையில் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை செலுத்தும் போது அந்த நாணயத்தாள்களை இயந்திரம் ஏற்க மறுப்பதாக பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் கொட்டகலையில் உள்ள இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில், குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சில தனியார் நிதி நிறுவனங்களில் பணத்தை வைப்புச் செய்யும் போது பணம் எண்ணும் இயந்திரங்களில் குறித்த தாள் நிராகரிக்கப்படும் சம்பவங்களும் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொது மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் கூறுகையில், பணம் எடுக்கும் மற்றும் வரவு வைக்கும் இயந்திரங்கள் மற்றும் பணத்தை எண்ணும் இயந்திரங்களில் புதிய 2000 ரூபா தாள்களைப் புதுப்பிக்கத் தவறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.