;
Athirady Tamil News

எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபா முடங்கும் அபாயம் ; ரஷ்யா எச்சரிக்கை

0

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான கியூபா, அதன் அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் பெற்று வந்தது. இதற்கு ஈடாக, பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளை அளித்து வந்தது.

இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்தது.

இதையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தினார்.

மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், கியூபாவில் விமானம் மற்றும் பிற போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அசாதாரணமான நிலைமையை சமாளிக்க அலுவலகங்கள், பள்ளி மற்றும் பல்கலைகளை கியூபா அரசு 4 நாட்களுக்கு மூடியுள்ளது.

அமெரிக்காவின் இந்த மனிதாபிமானமற்ற செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக, ரஷ்யா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேலும், கியூபாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமும், அமெரிக்க வரிகளுக்கு அஞ்சாமல் கியூபாவிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ஐ.நா., பொதுசெயலரும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.