;
Athirady Tamil News

மணிப்பூரில் வன்முறை நீடிப்பு: 50+ வீடுகள் தீக்கிரை – நிலவரம் என்ன?

0

உக்ருல்: மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வெடித்த வன்முறை நீடித்தததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் அந்த மாவட்டத்தில் இணை சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை லிட்டன் கிராமத்தில் நாகா மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களிடையே நடந்த மோதலில் சகிபுங் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் ஷிம்ரே என்பவர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் தாஸ் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தீ வைக்கத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இரு தரப்பினரிடையே துப்பாக்கிச் சூடும் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ருல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு அஞ்சி, பல கிராம மக்கள் அத்தியாவசிய உடைமைகளுடன் அண்டை மாவட்டமான காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான பகுதிகளுக்கு தப்பிச் சென்றனர். உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

“லிட்டன் சம்பவத்தைத் தொடர்ந்து கொன்ஷாகுல் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மையில்லை. கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதால் ஒருசிலர் மட்டுமே வாடகை வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் வன்முறையைத் தடுக்கவும், அமைதியை மீட்டெடுக்கவும் முயற்சிகள் தொடர்ந்து வருவதால், பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பிறகு முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. எனினும், அந்த மாநிலத்தில் மறுநாளே வன்முறை வெடித்தது. குகி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் லிட்டன் பஜார் பகுதியில்வன்முறை வெடித்தது கவனிக்கத்தக்கது.

தற்போது, உக்ருல் மாவட்டத்தில் உள்ள லிட்டன் சரோய்கேங் கிராமத்தில் நாகா மற்றும் குகி சமூகத்தினரிடையே வெடித்த மோதலில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உக்ருல் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவையை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.