;
Athirady Tamil News

முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை

0
முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில்  ஒன்றில் தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்ட  கோரிக்கையினை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர் தெரிவிப்பு
சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி வங்கி மற்றும் வங்கி சங்கங்களுக்கான சமுர்த்தி கடன் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்  யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. ஸ்ரீவர்ணன் அவர்களின் தலைமையில்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சமுர்த்தித் திணைக்களத்தின் குறுநிதிப் பணிப்பாளர் திரு. லால் கருணாதிலக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (12.02.2026) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தொடக்கவுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக சமுர்த்தி பணிப்பாளர் நாயகமுமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 சமுர்த்தி வங்கிகள் காணப்படுவதாகவும், அதன் செயற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், சமுர்த்தி திணைக்களங்களின் செயற்பாடுகள் தொடர்பாக  அவதானிக்கின்ற போது நலிவுற்ற அல்லது வறுமை கோட்டிற்கு உட்பட்ட மக்களோடு பணியாற்றுகின்ற வாய்ப்பு சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ளமை அவர்கள் செய்த பாக்கியம் எனவும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் தங்களுடைய வாழ்க்கை தரத்தினை உயர்த்தும் நோக்கில் சமுர்த்தி திணைக்களங்களுடன் தங்களுடைய தொடர்புகளை பேணுகின்றனர் எனவும்,
பொதுமக்களுக்கான கடன்  வழங்கும் செயற்பாடுகளில் அரச வங்கிகள் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் கடன் அறவீட்டு முறைகளில் பாரிய இடைவெளி காணப்படுவதாகவும், மாறாக நுண்கடன் நிறுவனங்களின் கடன் வழங்கும் மற்றும் அறவீட்டு முறை வேறுபட்டதாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
மேலும், சமுர்த்தி செயற்பாடுகள் காலத்துக்கு காலம் மாற்றமடைந்தாலும் அதன் நோக்கம் ஒன்றாகவே காணப்படுகின்றதாகவும், அதாவது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்காகவே காணப்பட்டது எனவும், அது தற்போது  மறுபடிவம் பெற்று சமூகவலுவூட்டல்  செயற்பாடாக மாற்றமடைந்துள்ளது எனவும், இருந்தாலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் பிரதான கருப்பொருளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை காலத்துக்கு காலம் மேம்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளை அந்தந்த திணைக்களங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும்,
சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகளை வினைத்திறனாக்கி ஏனைய வங்கிகளுக்கு நிகரான முறையில் உயர்த்த   வேண்டும் எனவும் தெரிவித்ததுடன்,  கொழும்பு மாவட்டத்தின்  சமுர்த்தி வங்கி  ஒன்றில் நகை அடகு  சேவை மற்றும் தான்னியங்கி இயந்திரம் (ATM) நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,
இவ்வாறான திட்டங்களை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு சமுர்த்தி வங்கியில் நடைமுறைப்படுத்தினால் அதற்கு அரசாங்க அதிபர் என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் ஆகியவற்றில் உள்ள தலா ஒரு வங்கிகளில் இச் செயற்பாடுகளை ஆரம்பிக்க பூரண ஒத்துழைப்பு நல்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றுகின்ற முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் தனிப்பட்ட கவனத்தை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், புதிய திட்டங்களை எமது மாவட்ட சமுர்த்தி வங்கிகளில் முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,
நிதியோடு நேரடியாக பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களாக  காணப்படுவதால் மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் பணியாற்ற வேண்டிய தேவைப்பாடு உள்ளதாகவும், மக்களுக்கு கடன் வழங்கி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே சமுர்த்தி வங்கிகளின் பிரதானமான செயற்பாடு எனவும், இதனை வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டும் எனவும், மக்களுக்கான தேவைகளை மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்காகவே அரசாங்கத்தினால் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இவ் பயிற்சிப் பட்டறை நிகழ்வில் அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க,
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள சமுர்த்தி வங்கிகளில் தலா ஒன்றில் தானியங்கி இயந்திர  வசதி (ATM) மற்றும் நகை அடகு சேவை முறைமை ஒன்றை நிறுவுவதற்கு உரிய நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாக  சமுர்த்தி திணைக்களத்தின் குறுநிதி பணிப்பாளர் லால்  கருணாதிலக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் பயிற்சிப் பட்டறையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக சமுர்த்தி கணக்காளர் திரு. முருகதாஸ்,    கொழும்பு தலைமையகத்தில் இருந்து வருகை தந்திருக்கின்ற சமுர்த்தி முகாமையாளர்கள்  தயாபரன், ரணவீர, மொழிபெயர்ப்பாளர், அபிரகாம் அலியார்,  யாழ்ப்பாண மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர்கள், வங்கிச்சங்க கருத்திட்ட முகாமையாளர்கள் சமுர்த்தி திணைக்கள  கடன் செயற்பாடுகளுடன் தொடர்புடைய சமுர்த்தி உத்தியோகத்தர்கள்
கலந்து கொண்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.