;
Athirady Tamil News

யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு சட்ட சிக்கல்

0

யாழ்ப்பாணம் மண்டைதீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மைதான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கட்டாய சுற்றுச்சூழல் அனுமதிகள் இன்றி இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அங்கீகரிக்கப்பட இல்லை
இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் தேவையான அனுமதிகள் பெறப்படாத போதிலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் கனரக இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் இதற்கான ஆரம்ப சுற்றுச்சூழல் ஆய்வு அல்லது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு எதுவும் மேற்கொள்ளப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிப்பது சட்டத்தை மீறும் செயலாகும் என அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த விதிமீறல்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஒழுங்குபடுத்தல் அமைப்புகளுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், திட்டத்தை நிறுத்துவதற்கு இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.