;
Athirady Tamil News

தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல்

0

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய ஆளுநர், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், வடக்கு மாகாணத்தை நோக்கிப் பல முதலீட்டாளர்கள் வருகை தருகின்றனர். ஆனால், அவர்கள் தமக்கான முதலீட்டு அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் இன்றும் பல அதிகாரத்துவச் சவால்களை எதிர்கொள்கின்றனர். அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்கும் செயன்முறையை நாம் விரைவுபடுத்தாவிட்டால், முதலீட்டாளர்கள் விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலையே ஏற்படும். எனவே, இந்த அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் சுற்றாடல் அமைச்சின் கீழான நிறுவனங்கள் ஏற்படுத்தும் தாமதங்கள் மற்றும் தடைகள் இயலுமானவரை விரைவாகக் களையப்பட வேண்டும், என வலியுறுத்தினார்.

மேலும் தொடர்ந்த ஆளுநர், சுற்றாடல் அமைச்சின் கீழான வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. போர் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலகட்டத்தில், அவர்கள் மீளத் திரும்புவதற்கு முன்னதாகவே எவ்வித களநிலை ஆய்வுகளோ அல்லது மக்கள் கலந்துரையாடல்களோ இன்றி, வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் மக்களின் காணிகள் இத்திணைக்களங்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இதற்குத் தீர்வுகாணும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தச் செயன்முறைகளை மேலும் துரிதப்படுத்தி, மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

‘எமது மாகாணத்தில் சுற்றாடல் தொடர்பான அதீத கரிசனையுடனேயே நாம் இருக்கின்றோம். எமக்கு அபிவிருத்தி அவசியம்;. அதற்காகச் சுற்றாடல் கரிசனை இன்றி நாம் அபிவிருத்தியைக் கோரவில்லை. பல தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மரம் நடுகைத் திட்டங்களை இங்குச் சிறப்பாக முன்னெடுத்துள்ளன. இதேவேளை, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் திண்மக் கழிவகற்றல் என்பது தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. அதற்கான நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் சுற்றாடல் அமைச்சின் கீழான நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், எமது மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, இந்தச் சட்டவரைவு திருத்தம் தொடர்பான உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை அனைவரும் முன்வைக்க வேண்டியது அவசியமாகும், என்றார்.

மேலும், ‘சுற்றாடல் அமைச்சின் கீழான வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கரையோரப் பேணல் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் எமது மாகாண மக்களிடத்தில் பெரும் அதிருப்தி நிலவுகின்றது. இத்திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பு எமக்குச் சரிவரக் கிடைப்பதில்லை. கௌரவ ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போன்று, முதலீட்டாளர்கள் திரும்பிச் செல்வதற்கு இந்த அதிகாரிகளின் மந்தகதியான செயற்பாடுகளே காரணமாக அமைந்துவிடக் கூடாது. எனக்குத் தெரிந்த ஒரு முதலீட்டாளர், அனுமதிக்காக ஆறு மாத காலமாக அலைந்து கொண்டிருக்கின்றார். எமது மாகாணத்துக்கு வரவேண்டிய 100 மில்லியன் ரூபா பெறுமதியான மிகப்ரிய முதலீடொன்று, சுற்றாடல் அனுமதி கிடைக்காமை காரணமாக ஓராண்டுக்கு மேலாக இழுபறியில் இருக்கின்றது. இவ்வாறான நிலைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்,’ என அமைச்சர் இ.சந்திரசேகர் குறிப்பிட்டார்.

இதன் பின்னர், தேசிய சுற்றாடல் சட்டத்திருத்தம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி ரவீந்திர காரியவசம் சபையோருக்கு விரிவாக விளக்கமளித்தார். பின்னர் சுற்றாடல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக பதபெந்தி தனது கருத்துக்களையும் தீர்வுகளையும் முன்வைத்தார்.

‘வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியனவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினை, மாகாணத்தின் பிரதான பிரச்சினையாக உருவெடுத்துள்ளமை குறித்து எமக்கு முழுமையான தெளிவுள்ளது. போரின் பின்னர் குறித்த இரண்டு திணைக்களங்களும் தமக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களை நேரடியாகக் கள ஆய்வுகளை மேற்கொள்ளாது, ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தின் ஊடாகவே எல்லைப்படுத்தியுள்ளன. இதனால் எல்லை நிர்ணயங்களில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் இக்காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, கடந்த ஓகஸ்ட் மாதம் விசேட அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த உபகுழு தற்போது மாவட்ட ரீதியாகத் தரவுகளைச் சேகரித்து வருவதுடன், எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இது தொடர்பான தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதன்பின்னர், இப்பிரச்சினைக்கு எம்மால் சுமூகமான தீர்வை எட்ட முடியும்,’ என உறுதியளித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், ‘எமது அமைச்சின் கீழான நிறுவனங்களில் நிலவும் ஆளணி வெற்றிடங்கள் காரணமாகவே, முதலீட்டாளர்களுக்கான அனுமதிகளை வழங்குவதில் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக 1,685 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும் அதிகளவில் விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதன் ஊடாக, எதிர்காலத்தில் அனுமதிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் முற்றாகச் சீராகும் என நம்புகின்றேன். அத்துடன், கடந்த காலங்களில் எமது அமைச்சின் கீழான நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை என்பதையும் நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நிலைமையையும் சீர்செய்வதற்குரிய துரித நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன,’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவ்விசேட கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, யாழ். மாவட்டச் செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழான திணைக்களங்களின் மாவட்ட, மாகாண மட்ட அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.