;
Athirady Tamil News

எரிபொருள் விநியோக தட்டுப்பாடு.. முதல் நாடாக ‘அவசர நிலை’ பிரகடனத்தை அறிவித்தது பிலிப்பைன்ஸ்

0

மணிலா,

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பிற நாடுகளில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அங்குள்ள எரிசக்தி அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்சார அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என தெரிவித்தது. இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே மேற்கு ஆசியாவில் 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போரால் கடுமையான உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வழக்கமான வினியோகத்தை பாதித்துள்ளது.

இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் அரசு 98 சதவீத கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வாங்குவதால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போரால் பெட்ரோல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நாடு முழுவதும் தேசிய எரிசக்தி அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். நாட்டின் தற்போதைய கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர நிலையைத் தொடர்ந்து, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய ஒரு சிறப்புக் குழுவை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. எரிபொருள் இருப்பை உடனடியாக அதிகரிக்க, பெட்ரோலியப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தை அரசு தனது கையில் எடுத்துள்ளது. மேலும், எரிவாயு விலை உயர்வால் மின் கட்டணம் அதிகரிப்பதைத் தவிர்க்க, தற்காலிகமாக நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களையே அதிகம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.