;
Athirady Tamil News

டிரம்ப்பை ஒரு வாத்து என குறிப்பிட்டு இஸ்ரேல் தலைவர் கடும் விமர்சனம்

0

டெல் அவிவ்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். மீறினால், ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் கூறினார். இதற்காக ஈரானுக்கு, அமெரிக்கா காலக்கெடு விதித்தது. அதனை நீட்டித்தும் வந்தது. அந்த காலக்கெடு நேற்றிரவு 8 மணி வரையே நீடிக்கும் என டிரம்ப் கூறினார்.

அதன்பின்னர், ஈரான் உடன்படவில்லை எனில் கடுமையான தாக்குதல் இருக்கும் என கூறினார். இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதனை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலில் ஒரு பிரிவினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இஸ்ரேல் நாட்டின் அதிகார மையத்தின் தலைவர் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவரான ஸ்விகா போகல் கூறும்போது, டொனால்டு டிரம்ப், நீங்கள் ஒரு வாத்து போன்று வெளியே வந்துள்ளீர்கள் என சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

இஸ்ரேலின் எதிர்க்கட்சி தலைவரான யாயிர் லேபிட் கூறும்போது, இது ஓர் அரசியல் தோல்வி என்றும் இஸ்ரேலின் பாதுகாப்பில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்து உள்ளார்.

அவர் தொடர்ந்து, நம்முடைய தேச பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் முடிவுகளை எடுக்கும்போது, விவாதங்களின் ஒரு பகுதியாக கூட இஸ்ரேல் இல்லை. நம்முடைய எல்லா வரலாற்றிலேயும் இதுபோன்ற அரசியல் பேரிடர் ஒருபோதும் இருந்தது இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியல் ரீதியாக தோல்வியடைந்து உள்ளார். ராஜதந்திர ரீதியாகவும் தோல்வியடைந்து இருக்கிறார். அவர் நிர்ணயித்த இலக்குகளில் ஒன்றை கூட அவர் அடையவில்லை என்றும் கூறியுள்ளார்.

எனினும், ஈரானுக்கு எதிராக 2 வார காலம் தாக்குதல்களை நிறுத்துவது என்ற டிரம்ப்பின் முடிவுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்து உள்ளது. டிரம்ப்பின் போர்நிறுத்த ஒப்பந்த அறிவிப்பை நெதன்யாகு அலுவலகம் வரவேற்றுள்ளது. ஆனால், இந்த 2 வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனான் நாடு இடம் பெறாது என்றும் வலியுறுத்தி உள்ளது. இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.