;
Athirady Tamil News

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்

0

டெஹ்ரான்,

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவானது. இந்தப் போரின்போது அனுமதியின்றி ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற சில வெளிநாடுகளின் கப்பல்கள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தின.

மேலும் அவ்வழியாக கப்பல்கள் செல்வதைத் தடுக்க சிறிய படகுகள் மூலம் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கண்ணிவெடிகளை பொருத்தினர். போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இதையடுத்து, ஹார்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதையின் வழியாக சர்வதேச நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் எரிபொருள் வினியோகம் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய அந்நாட்டு படைகளால் முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை கடல்பகுதியில், கண்ணிவெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் அகற்றியது. கடலுக்கு சில நூறு அடி ஆழத்தில் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் வீசப்பட்டன என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட ராணுவ வரைபடத்தின்படி நடக்காமல், அவசர அவசரமாகச் செய்யப்பட்டதால், எந்தெந்த இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான துல்லியமான தரவுகள் ஈரானிடம் இல்லாமல் போய்விட்டது. பொதுவாக கண்ணிவெடிகளை வைப்பது எளிது. ஆனால் அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அகற்றுவது மிகவும் கடினமான பணி. தற்போது அவற்றை அகற்றத் தேவையான நவீனத் தொழில்நுட்பம் ஈரானிடம் போதிய அளவு இல்லாததால் சிக்கல் நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.