இரவு நேர பணிபுரிபவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தற்கால வாழ்வியல் மாற்றங்களால் இரவு நேரங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொடர்ச்சியான இரவு நேர பணி மனித உடலில் பாரதூரமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மனித உடலானது இயற்கையாகவே பகலில் விழித்திருக்கவும், இரவில் உறங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் தொடர்ந்து இரவு நேரங்களில் பணிபுரியும் போது, உடலின் இயல்பான நேரச் சுழற்சி (Circadian Rhythm) முற்றாகப் பாதிக்கப்படுகிறது.
இது சத்தமில்லாமல் உடலில் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணமாகிறது. அதன்படி இரண்டாம் நிலை சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
உடலில் ஹோர்மோன் சுரப்பு சீரற்ற நிலையை அடைகிறது. குறிப்பாக, ஆண்களுக்குத் தேவையான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பெண்களுக்குத் தேவையான ஈஸ்ட்ரோஜன் ஆகிய ஹோர்மோன்களின் சுரப்பு பெருமளவில் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
இது நேரடியாகத் தம்பதியினரின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேர பணியை முடித்துவிட்டு பகல் முழுவதும் வீட்டிற்குள்ளேயே உறங்குவதால், இவர்களுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைப்பதில்லை.
இதனால் உடலில் விட்டமின் D குறைபாடு ஏற்பட்டு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் இது வழிவகுக்கிறது.
உடல்நலத்தைப் பாதுகாக்க, இரவு நேர பணியில் இருப்பவர்கள் முறையான உணவுப் பழக்கம் மற்றும் அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.