யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் சர்ச்சைக்குள்ளான காணொளி!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை, வைத்தியர் ஒருவர் இழுத்து விழுத்தியதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
குறித்த சம்பவம் சுமார் ஒரு வருடத்தின் முன்னர் நடந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் ஒரு வருடமாக வைத்தியசாலை பணிப்பாளர் நடவடிக்கையெடுக்கவில்லையென கூறப்படுகின்றது.
காணொளி வெளியான பின்னணியில் சந்தேகம்
இதேவேளை, ஒரு வருடத்தின் பின் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான பின்னணியில் சந்தேகம் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு ஊழியரை இழுத்து விழுத்திய வைத்தியர் தரப்பு, மற்றும் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் குடைச்சல் கொடுப்பதன் பின்னணியில் இந்த காணொளி வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
ஏனெனில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சிசிடிவி காணொளி காட்சிகளை சாதாரண பாதுகாப்பு ஊழியர்கள் பெற வாய்ப்பில்லை. வைத்தியசாலையுடன் தொடர்புள்ள , உயர்மட்டத்தில் உள்ள ஒருவரே சிசிரிவி வெளியீட்டின் பின்னணியில் இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் வைத்தியசாலைக்குள் ஹோர்ன் அடித்த காரணத்தால், வைத்தியர் அவருடன் முரண்பட்டு, மோட்டார் சைக்கிளை இழுத்து விழுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.