;
Athirady Tamil News

அன்டார்டிகாவில் வெப்ப அலை ; வேகமாக உருகும் பனிப்பாறைகள்

0

உலகின் மிகக் குளிரான பிரதேசங்களில் ஒன்றான அன்டார்டிகாவில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்ப அலை நிலவி வருவதால், அங்குள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தென் துருவத்தில் அமைந்துள்ள அன்டார்டிகா, உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகும். இந்தக் கண்டம் முழுவதும் பனிப்படலங்களால் மூடப்பட்டுள்ளதுடன், கோடைக்காலத்திலும் மைனஸ் 20 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகுவது வழக்கமாகும்.

எனினும், தற்போது அங்கு நிலவும் காலநிலை நிலைமைகள் விஞ்ஞானிகளை கவலையடையச் செய்துள்ளன. அன்டார்டிகாவின் டிரினிட்டி தீபகற்பத்தில் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள், இயல்பான அளவை விட சுமார் 20 டிகிரி செல்ஷியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 6 ஆம் திகதி அப்பகுதியில் 15.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், இது மிகவும் அபூர்வமான மற்றும் கவலைக்கிடமான சூழ்நிலை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த அசாதாரண வெப்பநிலை, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தீவிர அறிகுறியாக இருக்கலாம்” என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அன்டார்டிகாவில் உள்ள ‘காலின்ஸ்’ பனிப்பாறையின் உச்சிப் பகுதிக்கு சென்றபோது, கடுமையான வெப்பத்தால் வெளிப்புற பனிக்கட்டிகள் வேகமாக உருகிக் கொண்டிருப்பதை நேரடியாகக் கண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதல் மற்றும் ‘எல் நினோ’ போன்ற வானிலை நிகழ்வுகளின் தாக்கம் காரணமாக இந்த நிலைமை உருவாகியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, உலகின் மிகவும் முக்கியமான மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பனிப்பாறைகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘த்வைட்ஸ்’ பனிப்பாறையும் இந்த வெப்பநிலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அன்டார்டிகாவில் பனிப்பாறைகள் வேகமாக உருகும் நிலை தொடருமானால், எதிர்காலத்தில் கடல் மட்ட உயர்வு மற்றும் உலகளாவிய காலநிலை மாற்ற விளைவுகள் மேலும் தீவிரமடையக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.