;
Athirady Tamil News

ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு… ஜெலென்ஸ்கி விதித்த நிபந்தனை

0

கீவ்

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின.

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடியும் விட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், டிரம்ப் பேசினார். எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை.

இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஜெலென்ஸ்கி நிபந்தனை விதித்துள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுடன் எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு நேரடி அமைதி பேச்சுவார்த்தையும் ரஷியா அல்லது உக்ரைனில் நடைபெறாமல், ஒரு நடுநிலையான மூன்றாவது நாட்டில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரஷியாவுடனான நேரடி பேச்சுவார்த்தைக்கு சாத்தியமான இடங்களாக சுவிட்சர்லாந்து, துருக்கி, மத்திய கிழக்கு நாடுகள் அல்லது அமெரிக்கா ஆகியவற்றை ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இத்தகைய உயர்நிலை அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நடுநிலையான இடமே மிக சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அந்நாட்டுக்கு சென்றுள்ளார். எனினும், அவருடைய இந்த கோரிக்கையை ரஷியா நிராகரிக்க கூடிய சூழல் உள்ளது. ஏனெனில், அமைதி பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ நகருக்கு ஜெலன்ஸ்கி வர வேண்டும் என்று ரஷியா கூறி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.