;
Athirady Tamil News

புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை!

0

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தூதரகங்கள் ஊடாக, தபால் மூலம் அல்லது பாதுகாப்பான இணையவழி முறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளிநாடு வாழ் இலங்கையர்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான விசேட குழு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் 15 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் உள்நாட்டுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான சட்ட ரீதியான மற்றும் நடைமுறை ரீதியான பொறிமுறையை தயாரிப்பதாக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இலங்கை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்

நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வாய்ப்பை வழங்காது இருப்பது அநீதியானது எனக் குறிப்பிட்டார்.

இது இலங்கை வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாகும். இதில் சுமார் 16 வெவ்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்த பின்னர், இது குறித்து விரிவாக ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. வெளிநாட்டுப் பணியாளர்கள், மாணவர்கள், இரட்டைப் பிரஜா உரிமை கொண்டவர்கள் மற்றும் பிற தேவைகளுக்காக வெளிநாடு சென்றவர்களென நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மேலதிக தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எஸ்.ஏ.கே.குளுங்க தெரிவித்தார்.

இச்செயற்பாடு நான்கு பிரதான துறைகளினூடாக நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

  1.  வாக்காளர் பதிவு: வெளிநாட்டுப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களை முறையாகப் பதிவுசெய்யும் பொறிமுறைகள்.
  2. தேர்தல் பிரசாரம்: வெளிநாட்டிலுள்ள வாக்காளர்களாகப் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் தாக்கம்.
  3. வாக்களித்தல்: தூதரகங்களூடாக, தபால் மூலம் அல்லது பாதுகாப்பான இணையவழி முறைகளைப் பயன்படுத்தி வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள்.
  4. வாக்குகளை எண்ணலும் மற்றும் முடிவுகளை வெளியிடுதலும்.

பல ஆண்டுகளாகக் கலந்துரையாடப் பட்டுவந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை நடைமுறைப்படுத்து வதற்காக, அமைச்சரவைத் தீர்மானத்துக்கமைய 2025 டிசம்பர் மாதம் இக்குழு நியமிக்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட காலத்துக்கு முன்னதாகவே, மூன்று மாதங்கள் குறுகிய காலப்பகுதிக்குள் அனைத்துத் தரப்பினரதும் கருத்துகளைக் கேட்டறிந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இது தொடர்பில் 90களின் ஆரம்பம் முதல் இது குறித்து விவாதங்கள் இடம்பெற்றுவந்தபோதிலும், முறையான அறிக்கை இந்தத் தடவையே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்காக அரசியல் கட்சிகள், சுயாதீன அமைப்புகள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து தகவல்களும் கருத்துகளும் பெறப்பட்டுள்ளன.

அதேசமயம் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு மேலதிகமாக உள்நாட்டில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள், சுங்க அதிகாரிகள் போன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் மீனவர்கள், கைதிகள் மற்றும் நோயுற்ற நிலையில் உள்ளவர்களுக்காக முன்கூட்டிய வாக்களிப்பு அல்லது நடமாடும் வாக்களிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அறிக்கையின் பரிந்துரைகள் எதிர்காலத்தில் பொதுமக்களின் கலந்துரையாடலுக்காகத் திறந்துவிடப்படவுள்ளதோடு இது நாட்டின் ஜனநாயகப் போக்கை மேலும் வலுப்படுத்துமென அமைச்சு எதிர்பார்க்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக்க பண்டார, குழு உறுப்பினர்களான வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் கலாநிதி எம்.எம்.எஸ்.பி.யாலேகம, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி.சேனநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.