ஆனந்த விஜேபால பதவி வகிக்கத் தகுதியற்றவர்; மனுவை விசாரிக்க தீர்மானம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்புகளின் வாதங்கள் எதிர்வரும் நீதிமன்ற அமர்வுகளில் பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியாகப் பணியாற்றி வருவதாகவும், எனவே அரசியலமைப்பின் பிரகாரம் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகைமையற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.