அதிக பணிச்சுமை ; சீருடையை கழற்றி வைத்துவிட்டு சென்ற பொலிஸ் அதிகாரி
காலி பயாகல பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தமது சீருடையையும் உபகரணங்களையும் பொலிஸ் நிலையத்திலேயே விட்டுவிட்டு பணியிலிருந்து விலகிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
107821 என்ற இலக்கத்தைக் கொண்ட மலிந்து தில்ஹார என்ற 26 வயதுடைய இந்த கான்ஸ்டபிள், நேற்றுமுன்தினம் (05) பொலிஸ் நிலையத்தின் கடமைப் புத்தகத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸார் விசேட விசாரணை
அதில், அதிக பணிச்சுமையின் காரணமாக தாம் மன அழுத்தத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர், தனது சீருடை மற்றும் ஏனைய உபகரணங்களை பொலிஸ் நிலையத்திலேயே விட்டுவிட்டு அவர் வெளியேறியுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிட்டிகல, இதிபலேகொட பகுதியைச் சேர்ந்த இவர், 2025 ஜூன் 8ஆம் திகதியன்று பொலிஸ் துறையில் இணைந்துள்ளார்.
பின்னர் ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து பயாகல பொலிஸ் நிலையத்துக்கு இணைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் மன அழுத்தத்திற்கான காரணங்கள் மற்றும் அவர் தற்போதைய இருப்பிடம் குறித்து கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.