கட்டுநாயக்க விமான நிலையத்தில் சொக்லேட் வடிவில் போதைப்பொருள் கடத்தல் – 24 வயது இளைஞர் கைது..!
கொழும்பு – விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான ‘ஹசீஸ்’ போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(10.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த, 24 வயதுடைய இளைஞர் ஆவார்.
சொக்லேட் வடிவில் போதைப்பொருள்
இதன்போது, சுமாராக 4 கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தனது பயணப் பொதியினுள் சூட்சுமமான முறையில் சொக்லேட் போன்று பொதி செய்யப்பட்ட 15 உறைகளுக்குள் ‘ஹசீஸ்’ போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், இளைஞரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான உத்தரவைப் பெற்று, இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் ஏனைய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.