;
Athirady Tamil News

காங்கோவில் தீவிரமாக பரவும் எபோலா வைரஸ் – 65 பேர் உயிரிழப்பு

0

கின்சாஹா,

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் முறையாக எபோலா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதன்பிறகு பலமுறை எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்ட நிலையில், தற்போது 17-வது முறையாக மீண்டும் காங்கோவில் எபோலா நோய்த்தொற்று பரவி வருகிறது.

இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட எபோலா தொற்று பரவல் காரணமாக காங்கோவில் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள எபோலா வைரஸ் பரவலால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காங்கோவின் இடூரி மாகாணத்தில் சுமார் 246 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

எபோலா வைரஸ் மிகவும் எளிதில் பரவக்கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அரிதான நோய் தொற்றாக இருந்தாலும், பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தான நோய்த்தொற்றாகும். எனவே, நோய் தொற்று தொடர்ந்து பரவுவதை தடுக்கும் வகையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காங்கோவில் ஏற்கனவே ஆயுதக்குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், அங்கு எபோலா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது அந்நாட்டிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.