பசிலுடையது என கூறப்பட்ட வீடு தியேட்டரானது! பல்கலை மாணவர்கள செய்த மாற்றம் ; பொலிஸில் அவசர முறைப்பாடு
கம்பஹா, மல்வானை பகுதியில் பசில் ராஜபக்சவிற்கு சொந்தமானது என கூறப்பட்ட வீட்டிற்குள் நுழைந்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் (IUSF) அதிரடியாக முற்றுகையிட்டுள்ளதுடன் குறித்த வீட்டிற்குள் கடந்த சில தினங்களாக பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ளதுடன் திரையரங்கு போன்று தயார் செய்து திரைப்படங்களை பார்த்து வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் கம்பஹா, மல்வானை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒரு தரப்பினர் சட்டவிரோதமாக நுழைந்து, அதனைத் தம்வசப்படுத்தியுள்ளமை தொடர்பாக தொம்பே பிரதேச செயலாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்தமைக்காக, சம்பந்தப்பட்ட குழுவினருக்கு எதிராக தொம்பே பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலாளரால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மல்வானை பகுதியில் அமைந்துள்ள, உரிமையாளர் எவருமற்ற இந்த வீடு மற்றும் காணியை குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்களுக்கு வழங்குமாறு கோரி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த குழுவினர் கடந்த 14ஆம் திகதி முதல் அங்கு தங்கியிருந்து போராட்ட நடவடிக்கையொன்றை ஆரம்பித்திருந்தனர்.
இதேவேளை, அவர்களின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ‘நவ ஜனதா பெரமுன’ கட்சியினரும் இன்று (16) தொம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தனர்.