ரூ.10 லட்சத்துக்கு நீட் வினாத்தாளை விற்ற பேராசிரியை மணிஷா
புனே: மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த பேராசிரியை மணிஷா குருநாத், நீட் வினாத்தாளை மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கு விற்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சம்மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவை சேர்ந்த மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மணிஷா குருநாத், அதே பகுதியை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்னி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் மணிஷா குருநாத், புனேவில் உள்ள மாடல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அந்த கல்லூரியின் முதல்வர் நிவேதிதா கூறும்போது, “கடந்த 6 ஆண்டுகளாக நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் பேராசிரியை மணிஷா குருநாத் இடம்பெற்றுள்ளார். எங்கள் கல்லூரியில் அவர் மீது எந்த புகாரும் எழவில்லை. அவர் வினாத்தாளை விற்றதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது’’ என்றார்.
புனே நகரின் கட்ராஜ் பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் பேராசிரியை மணிஷா வசிக்கிறார். நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இடம் பெற்ற அவர் எந்த ஒரு பயிற்சி மையத்துடனும் தொடர்பில் இருக்கக்கூடாது. நீட் பயிற்சி வகுப்பும் நடத்தக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், மணிஷா தன் வீட்டில் ரகசியமாக நீட் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். தன்னிடம் படித்த மாணவ, மாணவிகளிடம் தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நீட் வினாத்தாளை அவர் விற்றதாகக் கூறப்படுகிறது. பல்வேறு மாநில முகவர்களுக்கு தலா ரூ.32 லட்சம் வரை நீட்வினாத்தாளை அவர் விற்பனை செய்துள்ளார்.
தன் வீட்டில் ரகசியமாக நீட் பயிற்சி வகுப்பு நடத்தி வந்த பேராசிரியர் குல்கர்னியும் தனது மாணவ, மாணவிகள் மற்றும் முகவர்களுக்கு சில லட்சங்களுக்கு நீட் வினாத்தாளை விற்பனை செய்துள்ளார். பேராசிரியர் குல்கர்னி, புனேவில் அழகு நிலையம் நடத்தும் இன்னொரு மணிஷா ஆகியோருடன் பேராசிரியை மணிஷா குருநாத்துக்கு தொடர்பு இருந்துள்ளது. மூவரும் ஓரணியாக செயல்பட்டுள்ளனர். அழகு நிலையம் நடத்தும் மணிஷா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாடகை வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில், பேராசிரியை மணிஷா குருநாத் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.1 கோடியில் புதிய வீடு வாங்கி உள்ளார். தனது மகளை கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர்த்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
திட்டமிடப்பட்ட மிகப்பெரிய மோசடி
வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது: ஐந்து கட்டங்களாக நீட் வினாத்தாள் தயார் செய்யப்படுகிறது. முதல் கட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் நீட் தேர்வுக்கான வினாக்களை தயாரிக்கின்றனர். 2-ம் கட்டமாக பேராசிரியர்கள் அளித்த வினாக்கள் தொகுக்கப்பட்டு, இரு வகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும், 3-ம் கட்டமாக இரு வகை வினாத்தாள்களிலும் எழுத்து, கருத்துப் பிழைகள் சரிபார்க்கப்பட்டு, அவை திருத்தப்படும். 4-ம் கட்டமாக என்டிஏ மூத்த அதிகாரிகள் வினாத்தாள்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவார்கள். 5-ம் கட்டமாக இருவகை நீட் வினாத்தாள்களும் அச்சடிக்கப்படும்.
இதில் ஒரு வகை வினாத்தாள் மட்டுமே தேர்வின்போது வழங்கப்படும். நீட் வினாத்தாளை விற்பனை செய்த பேராசிரியை மணிஷா குருநாத், பேராசிரியர் பி.வி.குல்கர்னி ஆகியோர் என்டிஏ தயார் செய்த இரு வகை வினாத்தாள்களையும் மாதிரி வினாத்தாள்கள் என்ற பெயரில் விற்பனை செய்துள்ளனர். அவர்களின் மாதிரி வினாத்தாள்களில் மொத்தம் 300 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இதில் 150 கேள்விகள் கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாளுடன் அப்படியே பொருந்திப் போகின்றன. மீதமுள்ள 150 கேள்விகள், இரண்டாம் வகை வினாத்தாளில் இடம்பெற்றுள்ளன. இது நன்கு திட்டமிடப்பட்ட மிகப்பெரிய மோசடி. இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.