வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளமையால், அது தொடர்பில் தமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளனர்
வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீர் மற்றும் நகர்ப்புற அபிவிருத்திப் பணிப்பாளர் மனோஜ் சர்மா, பணிப்பாளர் சபையின் ஆலோசகர் மொன் வான் டெர் வ்லியட் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிமனையின் நகர்ப்புற, நீர் வழங்கல் மற்றும் துப்புரவுக்கான முதன்மைச் செயற்றிட்ட அதிகாரி கமல் தஹநாயக்க ஆகிய உயர்மட்டப் பிரதிநிதிகள், ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இச்சந்திப்பின்போது, தமது நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்த மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களைப் பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட பிரதிநிதிகள், தாளையடியிலிருந்து முன்னெடுக்கப்படும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பில் விசேடமாகத் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அத்திட்டத்தினூடாக வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகளை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், இணைப்புக் கட்டணங்கள் குறித்தான தமது ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
மேலும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்தும் விசேட திட்டத்தில், வடக்கு மாகாணத்தில் காணப்படும் நலிவடைந்த உள்ளூராட்சி மன்றங்களும் உள்வாங்கப்பட்டு அவற்றுக்கான முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகள், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
