;
Athirady Tamil News

உலகளாவிய எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் – இலங்கையில் ஏற்படப்போகும் பேரனர்த்தங்கள்..!

0

உலகளாவிய ரீதியில் எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் தித்வா புயல் தாக்கம் போன்றே பேரனர்த்தங்களையும் எதிர்கொள்ள நேரிடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொடுவேகொட தெரிவித்துள்ளார்.

எனினும் மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை, இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் முன்னிலையாகி அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.

பதவிக்கான வெற்றிடங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தித்வா புயல் தாக்கம் ஏற்பட்ட போது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 188 பதவிக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. தித்வா போன்ற ஒரு யானையை சிரட்டை போன்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்கொண்டது என்றே குறிப்பிட வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 24 மணித்தியால சேவைக்கான அவசர தொலைபேசி கட்டமைப்பு காணப்படுகிறது. இந்த அவசர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான வசதிகள் ஏதும் கிடையாது. அவர்கள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தான் 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபடுகிறார்கள்.

மாவட்ட மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு ஒன்று உள்ளது. அதில் எழுதுவினைஞர்கள் ஐந்து பேர், பிரதி பணிப்பாளர் ஒருவர், உதவியாளர் மற்றும் சாரதி ஒருவர் உள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மாலை 04.30 மணிக்கு பணியை முடித்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.

சவால்
குறித்த மாவட்டத்தில் 04.30 மணிக்கு பிறகு ஏதேனும் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்தால் பணிப்பாளரை அழைப்பதற்கு நீண்ட நேரம் செல்கிறது. மாவட்ட மட்டத்திலான அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகுடன் தொடர்புக் கொள்வது சவால்மிக்கதாக காணப்படுகிறது.

அதேபோல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு போதுமான ஆளனி வளங்கள் கிடையாது. காணப்படும் வெற்றிடங்களுக்கு உடன் நியமனங்களை வழங்க வேண்டும். மத்திய நிலையங்களுக்கு சொந்தமான கருவிகளை பராமரிப்பதற்கு கூட கடந்த காலங்களில் போதுமான மானியம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறான குறைபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.