மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தருக்கு அதிகாலையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ; போதையில் அரங்கேறிய கொடூரம்
மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடா வீதியில் தளவாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
தனியார் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு குழுவினர், மது அருந்திவிட்டு வாகனத்தில் கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த வேளையில், அதே பாதையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது மோதியுள்ளனர்.
விபத்தில் சிக்கிய துவிச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த நபர் அருகிலுள்ள காட்டிற்குள் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையின் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், ஏறாவூர் – தளவாய் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்தமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் பின்னர் குறித்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியிருந்தது.
இருப்பினும், விபத்து நடந்த இடத்தில் கிடந்த வாகனத்தின் உடைந்த உதிரிப்பாகங்களைக் கைப்பற்றிய பொலிஸார், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட துரித தேடுதல் நடவடிக்கையின் பயனாக, வாகனத்தையும் அதன் சாரதியையும் கைது செய்தனர்.
விபத்தின் தாக்கத்தால் வாகனத்தின் முன் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.