ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறை
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் – அவரது மனைவி உஷா தம்பதிக்கு நான்காவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என்று பெயரிட்டிருப்பதாக தம்பதி அறிவித்துள்ளனர்.
வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் தனக்கு நான்காவது குழந்தை பிறந்துள்ளது பற்றி ஜே.டி. வான்ஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உஷாவும், குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். எங்களது மூன்று குழந்தைகளும் தங்களுடைய சிறிய சகோதரனை உற்சாகத்தோடு வரவேற்றனர் என்று பதிவிட்டுள்ளார்.
சிகிச்சையளித்த வால்டர் ரீட் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவுக்கும் தம்பதியர் தங்களது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதிக்கு குழந்தை பிறந்திருப்பது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம், கடந்த 150 ஆண்டுகளில் அமெரிக்க துணை அதிபராக பதவியிலிருந்தபோது யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதிக்கு மகன் எவான் (2017), விவேக் (2020), மகள் மிரபெல் (2021) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். தற்போது அலெக் இந்த குடும்பத்தின் ஆறுவது உறுப்பினராக இணைந்துள்ளார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் உஷா. வான்ஸ் – உஷா இருவரும் யாலே சட்டப் பள்ளியில் படித்தபோது நட்பாகினர். 2013ஆம் ஆண்டு பட்டம் பெற்று அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படியும், கத்தோலிக்க முறைப்படியும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
துணை அதிபரானால்.. 4வது குழந்தை இல்லை!
வெள்ளை மாளிகையில் இது பற்றி பேசிய ஜே.டி. வான்ஸ், துணை அதிபர் ஆவதற்கு முன்பே, நான் உஷாவிடம், அன்பே, எனக்கு உண்மையிலேயே நான்காவதாக ஒரு குழந்தை வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர், சரி, ஆனால் நீங்கள் அமெரிக்காவின் துணை அதிபராகலாம் அல்லது நான்காவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்று பதிலளித்திருந்தார்.
நல்லவேளை, இன்று எனக்கு இவ்விரண்டுமே கிடைத்திருக்கிறது என்று புன்னகைத்தவாறே கூறியிருக்கிறார்.