;
Athirady Tamil News

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை ; காட்டுத்தீ, வறட்சியால் பல நாடுகள் பாதிப்பு

0

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசைத் தாண்டியுள்ளது.

இதனால் சுகாதாரம், மின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில், தேசிய வெப்ப கண்காணிப்பு அமைப்பின் கீழ் உள்ள 27 முக்கிய நகரங்களும் இந்த ஆண்டில் முதன்முறையாக ஒரே நேரத்தில் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் ரோம் நகரில் பொதுமக்களுக்காக நகர்ப்புற கடற்கரைப் பகுதிகளும் குளிரூட்டும் மிஸ்ட் விசிறிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவாக 41.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதேபோன்று ஸ்லோவாக்கியாவிலும் 42.2 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடும் வறட்சி காரணமாக டான்யூப் நதியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீர்மின் நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியிலும் நதிகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் மற்றும் பால்கன் நாடுகளில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக வெப்பமான நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.