;
Athirady Tamil News

இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்

0

வாஷிங்டன்,

உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொ டர்ந்து எடுத்து வருகிறது. இதில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே ரஷியா மீதான தடைகள் என்ற பெயரில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஷிய கச்சா எண்ணெயை வாங்குவதில் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. அதேபோல் சீனா, பிரான்ஸ், ஜப்பான், ஹங்கேரி, பெல்ஜியம் ஆகியவை ரஷியாவின் இயற்கை எரிவாயுவின் மிகப்பெரிய இறக்குமதியாளர்களாக உள்ளன.

இதற்கிடையே இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா சமீபத்தில் அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ரஷியா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சட்டம் – 2026 எனப் பெயர் மாற்றப்பட்ட இந்த மசோதா 86 – 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இருகட்சிகளின் ஆதரவுடன் (குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி) கொண்டு வரப்பட்ட இந்த மசோதா வாக்கெடுப்பில் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேறியது.

இதையடுத்து இந்த மசோதா வருகிற 31-ந்தேதி பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த மசோதா ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களைத் தண்டிக்கும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சட்டம் – 1996ன் காலாவதி தேதியை 2031-ம் ஆண்டு வரை நீட்டிக்கவும் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.