அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி(video)
முஸ்லிம் எம்பிக்களை இணைத்து ஜனாதிபதி, சவூதி மன்னரிடம் அவசரக் கோரிக்கை விடுக்க நடவடிக்கை
பாறுக் ஷிஹான்
சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நேற்று இரவு (18) நேரில் விஜயம் செய்தார்.
அனோஜனின் தாயார் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த அவர், அவர்களுக்குத் தனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்ததுடன், அனோஜனைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
சவூதி மன்னருக்கு அவசரக் கோரிக்கை
இச் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த எம்பி ரிஷாட் பதியுதீன்:
“அனோஜனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள செய்தி இலங்கை முஸ்லிம் சமூகத்தினரிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அனோஜனின் குடும்பத்தினர் கொண்டுள்ள அதே உணர்வுடனும் கவலையுடனுமே நாங்களும் முஸ்லிம் சமூகமும் இருக்கின்றோம்.
எனவே, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூலமாகச் சவூதி அரேபிய மன்னருக்கு அவசர வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினூடாகவும் இவ் விவகாரத்தில் தலையிட்டு அனோஜனின் விடுதலை தொடர்பில் சவூதி அரசாங்கத்திடம் கருணை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்
மேலும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்துப் பேசியுள்ளதாகவும், அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாகச் செயற்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அனோஜன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் போது தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர். இதன்போது, முஸ்லிம் சமூகம் இந்த விவகாரத்தில் தங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இவ் விஜயத்தின் போது கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சீ. எம். முபீத் உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
