திலீபனின் சிலையை மீண்டும் நிறுவ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை!(video)
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக நிறுவப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுமாறு கோரியும் நேற்று திங்கட்கிழமை (28) விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் திகதி, தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள நினைவிடப் பகுதியில் இச் சிலை நிறுவப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக 12 நாட்கள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், கடந்த சனிக்கிழமை (26) இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.
இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (27) யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் வருகை தந்த 20க்கும் மேற்பட்ட பொலிஸார், குறித்த சிலையை அங்கிருந்து அகற்றிச் சென்றதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்ட இச் சம்பவத்தைக் கண்டித்தும், அதனை மீண்டும் உரிய இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் இக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இப் போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி:
“தியாகி திலீபன் தமிழ் மக்களுக்காக உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரைத் தியாகம் செய்தவராவார். அவரது சிலை பொலிஸாரால் அகற்றிச் செல்லப்பட்டமை எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது.
பல வருடங்களாக எமது உறவுகளைத் தேடித் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் எமக்கு இன்னும் நீதி கிடைக்காத நிலையில், தியாகி திலீபனின் நினைவாக அமைக்கப்பட்ட சிலையும் அகற்றப்பட்டிருப்பது எமது மனங்களை மேலும் புண்படுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் வரலாற்றுடன் தொடர்புடையவர்களின் நினைவாகச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தியாகி திலீபனின் சிலையை மீண்டும் அது அமைக்கப்பட்டிருந்த இடத்திலேயே நிறுவுவதற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
