;
Athirady Tamil News

நடுவானில் 174 உயிர்களைக் காத்த இந்திய விமானிக்கு துபாய் இளவரசர் நேரில் வாழ்த்து…

0

துபாய்,

நடுவானில் சக விமானியின் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், சாதுரியமாக செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று நேரில் சந்தித்து பாராட்டினார்.

நடுவானில் நடந்த பயங்கரம்

பிளைதுபாய் விமானம் கடந்த மாதம் 30-ந்தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அதன் இணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி திடீரென கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார்.

விமானியின் சாதுரியம்- அவசரத் தரையிறக்கம்

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த நிலையிலும், ஸ்மித் மச்சார் சாதுரியமாக செயல்பட்டு காக்பீட் கதவைத் திறந்தார். இதன் மூலம் உள்ளே நுழைந்த பயணிகள் மற்றும் பிற விமானப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் பாதுகாப்பாக அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்டு, 174 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

துபாய் இளவரசர் நேரில் சந்திப்பு

சவுதியில் முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் விமானி ஸ்மித் மச்சார் துபாய்க்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்ற துபாய் இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம், விமானி ஸ்மித் மச்சாரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது அபாரத் துணிச்சலையும், நூற்றுக்கணக்கான உயிர்களைக் காத்த தியாக உணர்வையும் மனதாரப் பாராட்டிய இளவரசர், அமீரகம் எப்போதும் அவருக்கு துணையாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.