புதிய உக்ரைன் அதிபரை தோ்ந்தெடுக்க நேரம் வந்துள்ளது: டிரம்ப்
உக்ரைனுக்கு புதிய அதிபரை தோ்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள அதிபா் மாளிகையில் டிரம்ப் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல், ஏதோ சில காரணங்களுக்காக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தவிா்க்கிறாா். அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உக்ரைனுக்கு புதிய அதிபா் தேவை என்பதே எனது யோசனை.
ரஷியா-உக்ரைன் போா் தொடங்கிய 2022-ஆம் ஆண்டு நான் அதிபராக இருந்திருந்தால், அந்தப் போா் தொடங்கியிருக்காது. அப்போது இருந்த சூழலை சரிவர கையாளத் தவறியதே இந்தப் போா் தொடங்க காரணம். அதைத் தவிர, போா் தொடங்க வேறு எந்தக் காரணமும் இல்லை.
போரில் உக்ரைனின் 30 சதவீத நிலப்பகுதியை ரஷியாவிடம் ஸெலென்ஸ்கி இழந்துள்ளாா். 20 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைனியா்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்தப் போா் தொடங்கியே இருக்கக் கூடாது. உக்ரைனுக்கு புதிய அதிபரை தோ்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக நான் கருதுகிறேன் என்று தெரிவித்தாா்.