தேசியப் பாடல் போட்டியில் கலந்து கொள்ளும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்
தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி” இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் பங்கேற்கவுள்ளனர்.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிப் போட்டி நாளைய தினம் வியாழக்கிழமை பத்தரமுல்லை, சுஹுருபாயா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 போட்டியாளர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
சாவகச்சேரியைச் சேர்ந்த குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவை சேர்ந்த றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகிய இருவரே தெரிவாகியுள்ளனர்.
இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவுள்ள இருவரும் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேரில் சந்தித்த போது, மாவட்ட செயலர் தனது வாழ்த்துத் தெரிவித்தார்.
