இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதனை முன்னெடுப்பதில் ஆளுநர் செயலகம், மாகாண சபை மற்றும் மாவட்டச் செயலகங்கள் இணைந்து செயற்படவுள்ளன.
இம்மாநாட்டின் ஊடாக 50க்கும் மேற்பட்ட நேரடி வர்த்தகச் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் முதல் நாளில் சந்தை வாய்ப்புகள் தொடர்பான அமர்வுகளும், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான அறிமுகங்களும் இடம்பெறவுள்ளன.
இரு நாள்களிலும் வர்த்தகக் கண்காட்சிகளும் நேரடி வர்த்தகச் சந்திப்புகளும் நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் நாளில் வர்த்தகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முயற்சி வெறுமனே ஒரு கண்காட்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல், வடக்கு மாகாணத்தின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், ஏற்றுமதித் துறையை விரிவுபடுத்தவும், பிராந்தியத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நீண்டகாலத்தில் நிரந்தரக் கண்காட்சி மற்றும் வர்த்தகத் தளமொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் இந்த முயற்சி முன்னிலைப்படுத்துகிறது என இன்றைய கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
