காட்டு யானைகள் அட்டகாசம்- நயினாகாட்டில் ஒருவர் உயிரிழப்பு- சதோச களஞ்சியம் சேதம்.(video)
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் பிரதான வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் ஊடுருவுவதால், மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
யானை தாக்குதலில் குடும்பஸ்தர் பலி
இறக்காமம் 07 – நயினாகாடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயதுடைய மீரா
தஸ்லிம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹோட்டல் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த காட்டு யானையைக் கண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதன்போது நிலத்தில் இடறி விழுந்த அவரை யானை மிதித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காட்டு யானை
இதேவேளை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு யானையொன்று, வனவிலங்கு அதிகாரிகளின் தீவிர சிகிச்சைகளுக்கு மத்தியிலும் நேற்று (24) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குடியிருப்புகளுக்குள் புகுந்து தொடரும் சேதங்கள்
நேற்று இரவு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அதனை அண்டிய வீதிகளில் காட்டு யானைகள் சுதந்திரமாக உலாவந்துள்ளன.
அத்துடன், இன்று அதிகாலை வேளையில் கல்முனை லங்கா சதோச களஞ்சியத்தின் முன்பக்கக் கதவை உடைத்து சேதப்படுத்திய யானைகள், அங்கிருந்த பொருட்களையும் நாசமாக்கியுள்ளன. மேலும், அதனை அண்டியுள்ள வீடொன்றின் சுற்றுமதிலையும் உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன.
உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் அமைந்துள்ள சபூர் பள்ளிவாசலுக்கு சுபஹ் தொழுகையை நிறைவேற்றுவதற்காகச் சென்ற மௌலவி ஒருவர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
வழக்கம்போல் சுபஹ் தொழுகைக்காகத் தனது சைக்கிளில் சபூர் பள்ளிவாசலை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே குறித்த மௌலவி மீது காட்டு யானை திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
நொடிப்பொழுதில் ஏற்பட்ட இந்த ஆபத்திலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய போதிலும், அவர் பயணித்த சைக்கிள் யானையினால் கடுமையாக மிதித்து எட்டி உதைக்கப்பட்டு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
சம்பவத்தையடுத்து அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்ட மௌலவி, உடனடியாக சிகிச்சைக்காக சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் இந்த யானை அச்சுறுத்தலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், வனவிலங்கு திணைக்களமும் உரிய அதிகாரிகளும் உடனடியாகச் தலையிட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
யானைகள் அதிகமாக நடமாடும் எல்லைப் பகுதிகளை அடையாளம் கண்டு, புதிய யானை வேலிகளை அமைப்பதுடன், ஏற்கனவே பழுதடைந்துள்ள யானை வேலிகளை அவசரமாகச் சீரமைத்து, மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனப் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
