வவுனியாவில் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை பாதிப்பு: கவனிப்பாரற்ற நிலையில் விதை உற்பத்திப் பண்ணை – மக்கள் கவலை!
வவுனியாவில் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை பாதிப்பு: கவனிப்பாரற்ற நிலையில் விதை உற்பத்திப் பண்ணை – மக்கள் கவலை!
வவுனியா மாவட்டத்தில் வீட்டுத் தோட்டங்களைச் செய்வதற்குத் தேவையான மரக்கறி கன்றுகளைப் (நாற்றுகளைப்) பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் மக்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.
அரசாங்கம் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைகளை ஊக்குவித்து வரும் போதிலும், அதற்கான மூலப்பொருட்களைப் பெற முடியாமல் தாங்கள் அவதியுறுவதாகப் பொதுமக்களும் இளைஞர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, வவுனியா மாவட்டத்தில் உள்ள விவசாய திணைக்களத்துக்கு சொந்தமான அரசாங்க விவசாய விதை உற்பத்திப் பண்ணையில் கடந்த காலங்களில் மரக்கறி வகைகளுக்கான நாற்று மேடைகள் அமைக்கப்பட்டு, கன்றுகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.
ஆனால், தற்போது அந்த விதை உற்பத்திப் பண்ணைக்குரிய காணிகள் சரியான பராமரிப்பின்றி, கவனிப்பாரற்ற நிலையில் புதர்கள் படர்ந்து காணப்படுகின்றன.
அத்துடன், விதை உற்பத்திக்கான நடவடிக்கைகளும் அங்கு மந்தகதியில் நடைபெறுவதாகக் கூறப்படுகின்றது.
இதன் காரணமாக, வீட்டுத் தோட்டங்களை அமைப்பதற்காகவும், தமது முயற்சியை வெற்றிகரமாகத் தொடங்குவதற்காகவும் குறித்த விதை உற்பத்திப் பண்ணைக்குச் செல்லும் பலரும், மரக்கறி கன்றுகளைப் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இந்த விதை உற்பத்திப் பண்ணை உரிய முறையில் பராமரிக்கப்படாமையாலும், மக்களுக்குப் பயன்பாடற்ற வகையில் காணப்படுவதாலும் பலரும் தமது வீட்டுத் தோட்டக் கனவை நிறைவேற்ற முடியாதவர்களாக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறையினர் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், விதை உற்பத்திப் பண்ணையைச் சீரமைத்து, எதிர்காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான மரக்கறி கன்றுகளைத் தடையின்றிப் பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

