படுக்கை நிலை நோயாளிகளுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் ஆறுதல்: சரசாலையில் புதிய வலிதணிப்பு மையம் திறப்பு!
குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படும் நோயாளர்கள் தமது இறுதி கால கட்டத்தை மகிழ்ச்சியாக கழிக்கவும், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குவதற்கா கவும் ஆறுதல் பராமரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி, சரசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘கம்ஃபர்ட் கெயார் ஹோம்’ (Comfort Care Home) எனப் பெயரிடப்பட்டுள்ள வலிதணிப்புப் பராமரிப்பு இல்லத்தின் (Palliative Care Home) திறப்பு விழா நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மருத்துவத்துறையில சில நோய்கள் வந்து ஒரு கட்டத்துக்கு மேல் குணப்படுத்த முடியாது என்ற நிலைக்கு செல்லும். முக்கியமாக புற்றுநோய், இருதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஒரு கட்டத்துக்கு அப்பால அவர்களுக்கு நாங்கள் குணப்படுத்த முடியாது என்ற ஒரு கட்டம் வரும்.
அந்த நேரத்தில அவர்களுக்கு தேவையானது ஒரு அன்பான ஆதரவு. ஒரு வலி தணிப்பு சேவை. இந்த சேவை மேலைத்தேய நாடுகளில் வழங்கப்படும்
அவ்வாறான நிலையில் வடமாகாணத்தில் அவ்வாறான சேவை தற்போது முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உண்மையில இப்படிப்பட்ட நோயாளர்களை கடைசி காலத்தில், அந்திம காலத்தில் வீட்டில வச்சு பராமரிக்கையில அந்த குடும்பத்தினர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
அவ்வாறான நோயாளர்களின் இறுதிக்கால கட்டத்தில் குறிப்பாக புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வலி தணிப்பு தேவைப்படும்.
இப்படிப்பட்ட நோயாளிகள் இறுதிக்காலத்தில அவர்களாலே எழும்பி தங்களுடைய இயற்கை வாதங்களை, சலம் மலம் கழிப்பதற்கு கூட அவர்கள் எழுந்து செல்ல முடியாத ஒரு நிலை இருக்கும்.
இப்படிப்பட்ட நோயாளிகள் இறுதிக்காலத்தில அவர்களாலே எழும்பி தங்களுடைய இயற்கை வாதங்களை, சலம் மலம் கழிப்பதற்கு கூட அவர்கள் எழுந்து செல்ல முடியாத ஒரு நிலை இருக்கும்.
பலரால சாப்பாடு விழுங்க இயலாமல் இருக்கும். அதனால் திரவ உணவுகள் வழங்கப்படும்.
இந்த நோயாளிகள் தொடர்ச்சியாக படுத்த படுக்கையாக இருப்பதனால் படுக்கைப் புண் வரலாம்.
இவ்வாறான நிலையில், அந்த நோயாளிகளை வீட்டில வச்சு பராமரிக்கிறது மிக மிக கஷ்டமான விடயம். அடிக்கடி அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டி இருக்கும் என்பதெல்லாம் உண்மையில அந்த குடும்பத்தினருக்கு மிகப்பெரிய ஒரு சுமையாக இருக்கும்.
அதனால் தான் இந்த பராமரிப்பு சேவை நிலையத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு தங்கியிருந்து முற்றிலும் இலவசமாக சேவையை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இங்கே பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உள்ளனர். அவர்களுக்கு விசேட பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் இந்த அந்திம காலத்தில் இருக்கின்ற நோயாளிகளுக்குரிய சகல விதமான சிகிச்சைகளையும் சேவைகளையும் வழங்குவார்கள்.
இங்கே தனித்தனியான அறைகளாக கட்டப்பட்டிருக்கின்றது. ஆண்களுக்கு 10 அறைகளும், பெண்களுக்கு 10 அறைகளுமாக 20 அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அறையிலும் அந்த நோயாளர்கள் தங்களுடைய குடும்பத்தோடு இங்கே வந்து இருந்து அந்த சிகிச்சையை இறுதி வரை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.