;
Athirady Tamil News

எமக்கு தனியாகப் பேருந்து நிலையம் உண்டு; வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை: இ.போ.ச யாழ். சாலை முகாமையாளர்

0
இலங்கை போக்குவரத்து சபையினருக்கு என யாழ்ப்பாணத்தில் மத்திய பேருந்து நிலையம் இருக்கும் போது வேறு இடங்களுக்கு சென்று அங்கிருந்து சேவையை ஆரம்பிக்க வேண்டிய எந்த தேவையும் தமக்கு இல்லை என  யாழ்ப்பாண சாலை முகாமையாளர் பிறகலாதன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம்  நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்தே, நெடுந்தூர போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியார் பேருந்து சங்கத்தினர்  இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு , நீண்ட கால இழுபறியின் பின்னர், செவ்வாய்க்கிழமை நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் போது தனியார் பேருந்துகள் மாத்திரமே அங்கிருந்து தமது சேவைகளை ஆரம்பித்தனர். இலங்கை போக்குவரத்து சபையினர் , அங்கிருந்து தாம் சேவையை ஆரம்பிக்க முடியாது என கூறி அவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை (டிப்போ) முகாமையாளரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
  இணைந்த சேவை நேர அட்டவணையின் கீழ் சேவைகளை முன்னெடுக்குமாறே எமக்கு நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. அந்த கட்டளையில் எந்த இடத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை

அதன் அடிப்படையில் கிளிநொச்சி , காரைநகர் , பருத்தித்துறை மற்றும் யாழ்ப்பாண ஆகிய நான்கு சாலையினரும் இணைத்து  இணைந்த சேவை நேர அட்டவணையை தயாரித்து கையெழுத்திட்டோம்
அதன் போது நாம் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே எமது சேவைகளை முன்னெடுப்போம் எனவும் எழுதி கையெழுத்திட்டோம்
நாம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தாம் சேவைகளை முன்னெடுப்போம் என நாம் அப்போது கூறி எழுதி கையொப்பம் இட்ட போது , எவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
இலங்கை போக்குவரத்து சபையினருக்கு என தனியாக பேருந்து நிலையம் இருக்கும் போது,  நாம் வேறு இடத்தில் இருந்து எமது சேவைகளை முன்னெடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என தெரிவித்தார்.
அதேவேளை , போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அனைத்துத் தரப்பினரும் இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு இணங்கிச் செயற்படாத தரப்புக்களுக்கு எதிராக உரிய பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.