;
Athirady Tamil News

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவில் 205ஆவது கொடியேற்று விழா கோலாகல ஆரம்பம்

0

நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்பெறும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 205ஆவது வருடாந்தக் கொடியேற்று விழா நேற்று (10) கோலாகலமாக ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனிதக் கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் புடைசூழ ‘தீன் கலிமா’ முழக்கத்துடன் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் மினாராக்களில் தக்பீர் முழக்கங்களுடன் ஏற்றி வைக்கப்பட்டது.

கொடியேற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்குப் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் மீதான புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப் ஆன்மீக நிகழ்வுகள் மற்றும் உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவுகள் என்பன இடம்பெறவுள்ளன.

இவ்விழாவானது எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளதுடன், அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானமும் வழங்கி வைக்கப்படவுள்ளது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக் கொடியேற்ற விழாவைக் காண்பதற்காகக் கல்முனைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. ஆதம்பாவா, எம். நிஸாம் காரியப்பர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஸாரப் முதுநபீன், கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்சார் (நளீமி), கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.எம். நௌபீஸ், கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். நிசார் (ஜே.பி), கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். ரம்சான், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் செயலாளர் எம்.எச்.எம். முபாரிஸ், பொருளாளர் எஸ்.எம். ரிப்னாஸ் உள்ளிட்ட தர்ஹா ஷரீப் நிர்வாகிகள், இராணுவ மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.