மே 9 களேபரம்: 90 பேர் கைது; சிலருக்கு மறியல் !!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, நேற்று (13) மட்டும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும் அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் இன்று கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
15 சந்தேக நபர்கள் நீர்கொழும்பையும் 17 சந்தேக நபர்கள் பொலன்னறுவையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறைகளை தூண்டிய குற்றச்சாட்டில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் இந்திராணி அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மினுவாங்கொட பிரதேச சபையின் தலைவர் குமார அரங்கல்ல மற்றும் மினுவாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஹசந்த லக்மால் பெரேரா ஆகியோரின் வீடுகளுக்கு தீ வைத்த மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.