கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (13.10.2025) பிற்பகல் 3 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
18.09.2025 அன்று நடைபெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினது பங்கேற்புடனும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் நிரோசன் ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தீவக பகுதிகளுக்கு 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். அதற்கிணங்க பிரதேச செயலாளர்களிடமிருந்து திருத்தப்பட வேண்டிய வீதிகளின் பட்டியல்கள் திரட்டப்பட்டு அரசாங்க அதிபரினால் அமைச்சிற்கு அனுப்பப்பட்டு அமைச்சினால் அதற்குரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இக்கலந்துரையாடலில் வேலணை,ஊர்காவற்றுறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இவ் வருடத்திற்கான கிராமிய வீதிகளின் அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு குறிப்பாக வீதி அபிவிருத்திகள் உரிய காலத்தில் வினைத்திறனாக நிறைவேற்றி முடிக்க அரசாங்க அதிபரால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபை தவிசாளர்கள் ,மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், வேலணை, காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக கணக்காளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



