;
Athirady Tamil News

யாழில். இருந்து மிக விரைவில் நேரடி ஏற்றுமதி

0
யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது, என அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார்.

வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
  அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள் குறித்து ஆளுநர் தெரிவிக்கையில், 

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தற்போதைய நிலையில் மூன்றாம் தரப்பினரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இலாபம் குறைவடைகின்றது.

இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஒரு விவசாயி தனது உற்பத்திப் பொருளைத் தானே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையிலான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த சுங்கத் திணைக்களம் உதவ வேண்டும், என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, 
 
இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம். தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம், எனக் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.