;
Athirady Tamil News

‘உங்கள் மகன் எங்களிடம் பிடிபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்’ – அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் பதில்

0

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் ஈரான் மீது அமெரிக்க படை, வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்திய 2 அமெரிக்க விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானங்களை இயக்கிய 2 விமானிகளும் ஈரான் எல்லைக்குள் குதித்துவிட்டனர். அதில் ஒருவரை இஸ்ரேல் பாதுகாப்பு படை மீட்ட நிலையில், மற்றொரு வீரர் ஈரானுக்குள் சிக்கிக் கொண்டார்.

இது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிவிப்பில், அமெரிக்க விமானியை உயிருடன் பிடித்து போலீசில் ஒப்படைப்பவருக்கு விலை உயர்ந்த பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அமெரிக்க விமானியின் தாயார் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டு எப்-15 போர் விமானங்களை இயக்கிய விமானிகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அதில் எனது மகனும் ஒருவர். இதுவரை எனது மகனிடம் இருந்தோ, அல்லது ராணுவத்திடமிருந்தோ எனக்கு எந்த தகவலும் வரவில்லை. என் இதயம் கவலையால் கனத்துப்போயுள்ளது. அனைத்து விமானிகளுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவிற்கு பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகங்கள் பதிலளித்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதகரம் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானில் காவலில் இருப்பதை விட, டிரம்ப்புடன் இருக்கும்போது உங்கள் மகன்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க மீட்புக் குழுக்களால் அவர் கண்டுபிடிக்கப்படுவதை விட, ஈரானால் பிடிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவும், நாகரிகமான ஈரானியர்களாகவும், காவலில் உள்ள கைதிகளை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் எப்படி நடத்துவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

அதே போல், தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “மனிதாபிமான சட்டங்கள் எழுதப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஈரானில் போர் கைதிகளுக்கான உரிமைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. நாங்கள் போர் கைதிகளை, உங்களின் காட்டுமிராண்டித்தனமான சியோனிஸ்ட் கூட்டாளிகளைப் போல் நடத்த மாட்டோம். எங்களிடம் ஒரு ஈரானிய நாகரிகம் உள்ளது. நாங்கள் அமெரிக்காவைப் போல கற்காலத்தில் வாழ்பவர்கள் இல்லை” என்று பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.