;
Athirady Tamil News

வலிகாமம் கிழக்கின் அறிவார்ந்த மாற்றங்களைசனசமூக நிலையங்கள் வாயிலாக ஆரம்பிப்போம்- தவிசாளர்  நிரோஷ்

0
வலிகாமம் கிழக்கில் அறிவார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சனசமூக நிலையங்கள் இன்றியமையாத பங்களிப்பினை வழங்க கடமைப்பட்டுள்ளன என பிரதேச சபையின் சபையின் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  தெரிவித்தார்.
உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக நிலையத்தின் திறமையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வைத்தீஸ்வரா அரங்கில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும தெரிவிக்கையில், சனசமூக நிலையங்கள் கிராமத்தின் வரலாற்று பாரம்பரியம் மிக்க மக்கள் அமைப்புக்களாகும். வலிகாமம் கிழக்கில் நூற்றாண்டுகளை கொண்ட சனசமூக நிலையங்கள் கூட உள்ளன. சனசமூக நிலையங்களே கிராமத்தில் மக்களின் தன்னெழுச்சியுடன் உருவான அபிவிருத்தி அலகுகளாகும்..
  கிராமமட்டத்தில் பல அமைப்புக்கள் காணப்படுகின்ற போதும் அவற்றில் பல பல்வேறுபட்ட காலங்களில் அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் மத்திய அரசாங்க அமைச்சுக்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால் சனசமூக நிலையங்கள் உள்ளூராட்சி அரசால் நிறுவகிக்கப்படும் நிலைத்தகு அபிவிருத்திக்கொள்கைகளை வரித்துக் கொண்ட தாபனங்களாகும்.

இப்படியான ஒரு நிலையில் வைத்திஸ்வரா சனசமூக நிலையம் விளையாட்டுக்கழகம், மகளிர் அமைப்பு, கோயில் நிர்வாகம் எனப் பலதரப்பட்ட நிறுவனங்களையும் ஒன்றிணைத்து பயணிக்கும் தாபனமாகவுள்ளது. அபிவிருத்தியில் சகலரினதும் பங்கேற்பும் ஒன்றிணைவது கட்டாயமானதாகும். இங்கு கல்வி, விளையாட்டு, கலை எனத் திறமையினை வெளிப்படுத்தியவர்களை கௌரவிக்கின்றீர்கள்.
 ஒரே மேடையில் பல்துறைத்திறமையாளர்களை கௌரவிப்பது ஏனையவர்களும் திறமைகளை வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற புத்துணர்வை கிராமமட்டத்தில் ஏற்படுத்துவதாக அமையும். கல்வி என்பது ஏட்டுக் கல்வியை மட்டும் கொண்ட விடயமல்ல பல்துறையாளர்களையும் அவர்களது ஆளுமையினையும் திறமையினையும் அங்கீகரிப்பதாக அமையவேண்டும்; என்பதே அடிப்படை. அவ்விடத்தில் உங்களது ஊக்கமும் ஆக்கமும் மன நிறைவைத்தருக்கின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத்தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்   தெரிவித்தார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.