கடும் மின்னல் ;வடக்கு கிழக்கு உட்பட 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் , 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் நாட்டின் சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்காக, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.