;
Athirady Tamil News

அமெரிக்காவில் அடுத்தடுத்து மாயமான 10 முக்கிய விஞ்ஞானிகள் – தீவிர விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு

0

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நாட்டின் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசிய ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த 10 முக்கிய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து காணாமால் போனதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

10 முக்கிய விஞ்ஞானிகள் மாயமானது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறுகையில், “விஞ்ஞானிகள் மாயமான வழக்குகளை முழுமையாக மதிப்பாய்வு செய்வதற்கும், இந்த வழக்குகளுக்கு இடையில் உள்ள பொதுவான தொடர்புகளை கண்டறிவதற்கும், அரசின் விசாரணை முகமைகள் மற்றும் எப்.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி, மைக்கேல் டேவிட் ஹிக்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. விண்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற இவர், நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வகத்தில் இயற்பியலாளராக பணியாற்றி வந்தார்.

மற்றொரு விஞ்ஞானி ஜேசன் தாமஸ், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி காணாமல் போனார். அவர் வீடு திரும்பாததால், அவரது மனைவி அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். அவரது உடல் 2026-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மசாச்சூசெட்ஸ் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது.

அணு இயற்பியலாளரும் எம்.ஐ.டி. பேராசிரியருமான நூனோ லூரேரோ, 2025-ம் ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி பாஸ்டனுக்கு அருகிலுள்ள தனது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தோனி சாவேஸ் என்ற விஞ்ஞானி, 2025-ம் ஆண்டு மே 4-ந்தேதி மாயமானார். அவர் கடைசியாகத் தனது வீட்டில் இருந்து நடைப்பயிற்சிக்காக வெளியே சென்றார் என்று கூறப்படுகிறது.

மெலிசா காசியாஸ் என்ற விஞ்ஞானி 2025-ம் ஆண்டு ஜூன் 26-ந்தேதி தனது வீட்டிலிருந்து மர்மமான முறையில் காணாமல் போனார். இவர் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்தார்.

நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளரான பிராங்க் மைவால்ட், 2024-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் தனது 61-வது வயதில் உயிரிழந்தார்.

ஜெட் புரபல்ஷன் ஆய்வகத்தின் ஊழியர் மோனிகா ஜசிண்டோ ரெசா, 2025-ம் ஆண்டு ஜூன் 22-ந்தேதி மலையேற்றப் பயணத்தின்போது காணாமல் போனார்.

கார்ல் கிரில்மேயர் என்ற விஞ்ஞானி 2026-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி தனது வீட்டின் முன் வராந்தாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கால்டெக் நிறுவனத்தில் வானியற்பியலாளராகப் பணிபுரிந்தார். மேலும், நாசாவுடன் இணைந்து புறக்கோள்களைச் சுற்றி நீர் இருப்பதை இவர் கண்டறிந்தார்.

48 வயதான ஸ்டீவன் கார்சியா என்ற விஞ்ஞானி, 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந்தேதி அல்புகெர்கியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே கிளம்பிச் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்டீவன் கார்சியா, அணு ஆயுதங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் கேன்சஸ் சிட்டி தேசிய பாதுகாப்பு வளாகத்தில் பணியாற்றி வந்தார்.

இவ்வாறு முக்கிய விஞ்ஞானிகள் மர்மான முறையில் உயிரிழந்தது மற்றும் காணாமல் போனது அனைத்தும் தற்செயல் நிகழ்வுகளா? அல்லது இதற்கு பின்னால் அமெரிக்காவின் எதிரிகளாக கருதப்படும் நாடுகளின் சதித்திட்டம் உள்ளதா? என்பது குறித்து அமெரிக்க உளவு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.