செயற்கை நுண்ணறிவு செய்திகளை உருவாக்கும் காலம்: நம்பிக்கையை இயந்திரமாக்க முடியாது
மீரா செல்வா மற்றும் பிராங்கோ பிர்கிக்
இன்றைய தொழிநுட்ப உலகில் தகவல் கட்டமைப்புகளை யார் கட்டுப்படுத்துவது என்பதை நாம் தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். பொது வாழ்க்கையிலிருந்து தொழில்நுட்பத்தை முற்றிலும் அகற்றிவிடுவது என்பது யதார்த்தமற்றது; அது தேவையற்றதும் கூட. ஆனால், அது வகிக்கும் பங்கு என்ன, அது யாருடைய நலனுக்காகச் செயல்படுகிறது என்பதை நாம் மறுபரிசீலனை செய்வது அவசியமாகும் .
இந்த ஆண்டு சாம்பியாவில் நடைபெறவிருந்த யுனெஸ்கோ உலக ஊடக சுதந்திர தின மாநாடு, இதழியலின் எதிர்காலம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. மனித உரிமைகளும் கருத்து சுதந்திரமும் மறைந்து போவதற்கு பல வழிகள் உள்ளன; அதில் ‘ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு’ என்பது இதழியலை நிலைத்தன்மையிலிருந்து வெகுதூரம் தள்ளும் மிக அண்மைய மற்றும் ஆபத்தான கருவியாகும்.
இன்று ஊடகங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் ஒரு பாலமாக அமைகின்றன. இவை அசல் செய்திகளுக்கு வாசகர்களை வழிநடத்துவதற்குப் பதிலாக, நேரடியாகப் பதில்களை வழங்குகின்றன.
அனுமதியின்றி உள்ளடக்கங்களைத் திருடுகின்றன ,உண்மை, ஊகம் மற்றும் அப்பட்டமான பொய்களை ஒன்றிணைத்து வழங்குகின்றன ,வாசகர்களின் நம்பிக்கையையும், ஊடகங்களின் வருமானத்தையும் சிதைக்கின்றன.
அதே சமயம், வளங்கள் குறைந்த செய்தி நிறுவனங்களுக்கு (குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்) செயற்கை நுண்ணறிவு ஒரு பயனுள்ள கருவியாகவும் இருக்கிறது. தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், உள்ளடக்கங்களை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கவும், சிறிய குழுக்களால் செய்ய முடியாத கடினமான பணிகளை தானியக்கமாக்கவும் இது உதவுகிறது. ஆகவே இந்த நன்மைகளையும் எம்மால் புறக்கணிக்க முடியாது
ஆனால், பலவீனமான கொள்கைகள் மற்றும் அரசியல் தாக்குதல்களால் ஏற்கனவே நலிவடைந்துள்ள ஊடகச் சூழலில், பத்திரிகையாளர்களுக்கும் அவர்கள் சேவை செய்யும் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பை உடைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அந்த பிணைப்பில்தான் ‘நம்பிக்கை’ வாழ்கிறது. அது உடைந்தால், இதழியல் தனது முக்கியத்துவத்தை இழக்கும்
இது வெறும் ஊடகப் பிரச்சனை மட்டுமல்ல. செயற்கை நுண்ணறிவு மூலம் பரப்பப்படும் தவறான வெறுப்புப் பேச்சுகளும் சர்வதேச இராஜதந்திரத்தையும், ஜனநாயக முடிவெடுக்கும் திறனையும் சிதைக்கின்றன. பருவநிலை மாற்றம், போர் மற்றும் பொது சுகாதாரம் போன்ற எல்லைகளற்ற சவால்களை எதிர்கொள்ள நமக்குத் தேவையான ‘உண்மையான தகவல்கள்’ இன்று கேள்விக்குறியாக்கப்படுகின்றன.
தனிப்பட்ட உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புதல் ,உள்ளூர் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் ,சமூகத்தின் நம்பிக்கையைப் பெற நேரத்தைச் செலவிடுதல்.. இத்தகைய மனிதத் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட இதழியலை இயந்திரமயமாக்க முடியாது.
தொழில்நுட்பம் என்பது மக்களுக்கும் நம்பகமான தகவல்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த வேண்டுமே தவிர, பலவீனப்படுத்தக் கூடாது.
கொள்கை வகுப்பாளர்கள்: தரவு பாதுகாப்பு மற்றும் உள்ளடக்க உரிமம் தொடர்பான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள்: தங்களின் தயாரிப்புகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
நிதி வழங்குநர்கள்: நீண்டகால, அறம் சார்ந்த ஊடகச் சூழலை உருவாக்க முதலீடு செய்ய வேண்டும்.இதழியல் துறை வெறும் தொழில்நுட்ப அதிர்ச்சிகளை உள்வாங்கிக் கொள்வதோடு நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் தனது குரலைப் பதிவு செய்ய வேண்டும்
தகவல் பரிமாற்றத்தின் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு நிச்சயம் இருக்கும். ஆனால், அது ஜனநாயகத்திற்குச் சேவை செய்யப் போகிறதா அல்லது அதைச் சிதைக்கப் போகிறதா என்பது நாம் எடுக்கும் முடிவுகளில்தான் உள்ளது. மனிதர்களை வெறும் தரவுப் புள்ளிகளாகப் பார்க்காமல், குடிமக்களாக மதிக்கும் இதழியலுக்கு நாம் கொடுக்கும் மதிப்பே இதற்கான விடையாகும்.