கிம் ஜாங் உன் வாரிசு தயாரா? இளம் வயது மகளின் ஆடை, சிகையலங்காரம் உணர்த்தும் விஷயங்கள்
2022 நவம்பரில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நேர்த்தியாக உடையணிந்த சிறுமியுடன் அருகில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
தனது தந்தையுடன் இணைந்து ஒரு பிரமாண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக்கு முன்னால் நடந்து சென்ற அவர், கறுப்பு நிற கால்சட்டை மற்றும் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். அவரது நீண்ட தலைமுடி பின்னால் கட்டப்பட்டிருந்தது.
அரசு பிரசார ஊடகங்களில் அச்சிறுமி அறிமுகமான அந்த நேரத்தில் அவருக்கு ஒன்பது வயது எனக் கூறப்படுகிறது.
அப்போதே ஜூ ஏ ஈர்க்கக்கூடிய வகையில் உடையணிந்திருந்தார்.
அதன் பிறகு அவரது சிகை அலங்காரங்களும், அவரது உடைகளும் நேர்த்தியாகவும், அதிநவீனமாகவும் மாறியுள்ளன.
இவ்வளவு இளம் வயதிலேயே அவருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கிம் ஜாங் உன் அவரைத் தனது வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாக தென் கொரியாவின் உளவு நிறுவனம் நம்புகிறது.
தற்போது 13 வயதுடையவர் என நம்பப்படும் ஜூ ஏ, ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ராணுவ அணிவகுப்புகளில் தனது தந்தைக்கு அருகில் நிற்பது மற்றும் அவருடன் வெளிநாடுகளுக்கு பயணம் செல்வது என பல புகைப்படங்களில் காணப்படுகிறார்.
ஆனால் தோல் உடைகள், மென் உரோம ஆடைகள் மற்றும் “சேவல் கொண்டை” சிகை அலங்காரம் போன்ற அவரது பாணிகள், அவர் நாட்டை வழிநடத்த தயார் செய்யப்படுவதற்கான அறிகுறிகள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.