இணையவழி விளையாட்டுகளில் சிறுவர்கள் அடிமைத்தன்மை ; பெற்றோர்களுக்கு நிபுணர்கள் அவசர அறிவுரை
இணையவழி விளையாட்டுகளில் சிறுவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு உளவியல் மற்றும் சமூக அபாயங்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல கருத்து தெரிவித்துள்ளார்.
இணையவழி விளையாட்டுகள்
அவர் தெரிவித்ததாவது, தற்போது இணையவழி விளையாட்டுகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிமுகமற்ற நபர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் சிறுவர்கள் நீண்ட நேரம் ஆன்லைன் சூழலில் ஈடுபட்டு, அறிமுகமற்ற நபர்களுடன் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உருவாக்கி, தனிப்பட்ட தகவல்களை பகிரும் அபாயம் அதிகரித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில், சிறுவர்கள் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் முக்கிய தகவல்களையும் அந்நியர்களுடன் பகிரும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பல இணையவழி விளையாட்டுகளில் வயது வரம்பு மற்றும் உள்ளடக்க எச்சரிக்கைகள் உள்ளபோதிலும், அவற்றின் கண்காணிப்பு குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக PEGI (pegi.info) போன்ற அமைப்புகள் மூலம் விளையாட்டுகளின் வயது வகைப்பாடுகளை பெற்றோர் அறிந்து கண்காணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பல விளையாட்டுகள் பரிசு மற்றும் வெகுமதி அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவை சூதாட்டத்திற்கு ஒத்த அடிமைத்தன்மையை உருவாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில சிறுவர்கள் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ. 4 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை இணையவழி விளையாட்டுகளுக்காக செலவழித்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
பெற்றோர் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது, சிறுவர்களில் கோபம், மன அழுத்தம் மற்றும் தாக்குதல் போன்ற மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இணையவழி விளையாட்டுகளை முழுமையாக கட்டுப்படுத்துவது கடினமானதாக இருந்தாலும், பெற்றோர் கண்காணிப்பு, திரை நேர வரம்புகள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.