;
Athirady Tamil News

88ஆவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான இஸ்ரேல் பிரதமர்

0

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டெல் அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை வரலாற்றில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவது இது 88ஆவது முறையாகும். நெதன்யாகுவின் “பாதுகாப்பு மற்றும் அரசியல் பணி அட்டவணை” காரணமாக, அன்றைய நீதிமன்ற அமர்வைச் சுருக்குவதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கியதாக இஸ்ரேலின் ‘சேனல் 12’ ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளின்படி, நெதன்யாகு மீது ஊழல், லஞ்சம் மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020ஆம் ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியதில் இருந்தே, நெதன்யாகு தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

மேலும், இந்த வழக்குகள் அனைத்தும் “தன்னை பதவியில் இருந்து கவிழ்ப்பதற்காக திட்டமிடப்பட்டு நடத்தப்படும் ஒரு அரசியல் சதி” என்றும் அவர் சாடியுள்ளார்.

இஸ்ரேலிய சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது தவறை அல்லது குற்றத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதிபரால் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் எதிர்கொள்ளும் இந்த ஊழல் வழக்குகளுக்குப் புறம்பாக, சர்வதேச அரங்கிலும் நெதன்யாகு பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இனப்படுகொலை போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்காக, கடந்த 2024ஆம் ஆண்டு முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) நெதன்யாகு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு எதிராகப் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.