கபிலவின் மரண விசாரணைகளில் திடுக்கிடும் திருப்பம்
முன்னாள் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் (CCD) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும்பல சாட்சியங்கள் கடந்த வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கு முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உயிரிழந்த கபில சந்திரசேனவின் பேர்ஸ் கண்டெடுக்கப்பட்டதா என நீதவான் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, அரவிந்த டி சில்வாவின் வீட்டில், கபில இறந்து கிடந்த அறையிலிருந்து பேர்ஸ் எதுவும் கிடைக்கவில்லை என்றும், அவருடைய கையடக்க தொலைபேசியின் கவருக்கு பின்புறம் ஒரு வங்கி அட்டை மட்டுமே இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய அறிக்கையின்படி, பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள வீட்டில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் பணிப்பெண்ணிடம் சிசிடி அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அவர் வீட்டை சுத்தம் செய்த போது, கபிலவின் அறைக்கு முன்னால் உள்ள பால்கனி பகுதியிலிருந்து இரண்டு பேர்ஸ்கள் (Wallets) கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் ஒரு ‘விசா கார்ட்’ (Visa Card) மற்றும் ‘சி பேங்க்’ (C Bank) வங்கி அட்டை என்பன இருந்துள்ளன. இந்த இரண்டு பணப்பைகளும் யாருடையவை என்பது குறித்து பொலிஸார் இப்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கபில சந்திரசேன தங்கியிருந்த வீட்டின் கார் நிறுத்துமிடத்தின் வழியாக வீட்டிற்குள் செல்வதற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. அந்த வழியால் யாரேனும் உள்ளே நுழைந்தார்களா என நீதவான் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த குற்றவியல் பிரிவு அதிகாரிகள், அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அவ்வழியாக யாரும் உள்ளே செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
ஆனால், வீட்டின் பிரதான நுழைவாயில் வழியாகச் சில நபர்கள் உள்ளே சென்றுள்ளமை சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே இவ்வழக்கில் தற்போது பெரும் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கபில சந்திரசேன இறப்பதற்கு முந்திய தினம், அவரை நீதிமன்றத்திலிருந்து பிணையில் எடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நபர்களே அங்கு வந்ததாக அவருடைய மனைவி அனுஷ்கா டி சில்வா ஏற்கனவே சாட்சியமளித்திருந்தார். எனினும், பிரதான வாசல் வழியாக வந்தவர்கள் பிணை எடுக்க வந்தவர்களா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக வந்தவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிணையாளர்களைத் தவிர வேறு சில வெளிநபர்களும் அன்று அங்கு தங்கியிருந்ததாக சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் தெரியவருகிறது.
கபில சந்திரசேனவின் தொலைபேசியான ‘iPhone 16 Pro Max’ ஐ திறப்பது குறித்து நீதவான் வினவியபோது, அதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) உதவியைப் பெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த தொலைபேசியில் ‘முக அடையாளம்’ போடப்பட்டிருந்ததால், கபில உயிரிழந்த பின்னர் சில அதிகாரிகள் அவரது சடலத்தின் முகத்திற்கு நேரே போனை வைத்து அன்லாக் செய்ய முயன்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. சிஐடி வசம் எந்தவொரு அதிநவீன தொலைபேசியையும் திறந்து தரவுகளைப் (Data) பெறும் தொழில்நுட்ப வல்லுநர்களும் உபகரணங்களும் உள்ளதால், விரைவில் இந்த போனில் உள்ள விபரங்கள் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மேலதிக சாட்சியங்களை 5 முக்கிய நபர்கள் வழங்கியிருந்தனர்.
இந்த சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின்படி, அரவிந்த டி சில்வாதான் கபிலவை பிணையில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. பிணையாளர்களைத் தயார் செய்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, இரவு நேரத்தில் சட்டத்தரணியிடம் கூட்டிச் சென்று, அவர்களுக்கு உணவளித்தது வரை அனைத்துமே அவரது ஒருங்கிணைப்பில் நடந்துள்ளன. மே 5ஆம் திகதி கிராம சேவகர் கடிதம் இல்லாததால் பிணை எடுக்கும் முயற்சி தோல்வியடைந்த போது, அரவிந்த டி சில்வா பலரைத் தொடர்புகொண்டு போலியான பிணையாளர்களைத் தயார் செய்ய முயன்றாரா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
வழக்கு விசாரணைகள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருவதாலும், மரணம் இன்னும் ‘சந்தேகத்திற்குரியதாகவே’ கருதப்படுவதாலும் பொலிஸ் மற்றும் சிஐடி விசாரணைகளின் முடிவிலேயே அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்.